வீட்டுக் கடனில் எந்த வட்டி விகிதம் நல்லது? வீட்டுக் கடனில் எந்த வட்டி விகிதம் நல்லது? - ETbuild

வீட்டுக் கடனில் எந்த வட்டி விகிதம் நல்லது?

ஒரு காலத்தில் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு பின்னர் வீடு கட்டினார்கள். 
இன்றோ கையில் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வீடு கட்டுவது அல்லது வாங்குவது முடியவே முடியாத காரியம். 

உயர் வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, சொந்த வீட்டு ஆசைக்கு நாடுவது வங்கிகளைத் தான். 

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கும் போது வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வதில் பலருக்கும் பிரச்சினை இருக்கும். 

இப்போது நடைமுறையில் என்ன வட்டி விகிதங்கள் உள்ளன? அவற்றின் நன்மை தீமைகள் என்ன? எந்த வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது நல்லது? 

வீட்டுக் கடனுக்காக வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் முன்பு மூன்று வகைகள் இருந்தன. 

நிலையான வட்டி (ஃபிக்ஸ்டு), மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங்), கலவை வட்டி (மிக்ஸ்டு). 

ஆனால், இப்போது கலவை வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுவதில்லை. எனவே நிலையான வட்டி, மாறுபடும் வட்டி என இரண்டு வட்டி விகிதங்கள் மட்டுமே உள்ளன. 

நிலையான வட்டி 
 
வீட்டுக் கடன் வாங்கும்போது நிர்ணயிக்கப்படுகிற வட்டி குறிப்பிட்ட காலத்துக்கு மாறாமல் 

அப்படியே இருப்பது தான் நிலையான வட்டி. இதில் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரே வட்டி விகிதமே இருக்கும். 

திரும்பச் செலுத்தப்படும் இ.எம்.ஐ.யில் எந்த மாற்றமும் இருக்காது. 
3 அல்லது 5 ஆண்டுகளு க்குப் பிறகு பணச் சந்தையில் நிலவும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப நிலையான வட்டி விகிதத்தில் மாறுதல் செய்யப்படும். 

இங்கு 3 அல்லது 5 ஆண்டுகள் என்று கூறப்படுவது எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. 

சில வங்கிகள் இன்னும் கூடுதல் காலத்தைக்கூட எடுத்துக் கொள்ளலாம். 

இந்த வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வதில் சில நன்மைகளும் இருக்கவே செய்கின்றன. 

ஒரு வேளை வீட்டுக் கடன் வட்டியை வங்கி உயர்த்தினாலும் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் மாறாது. 

உடனுக்குடன் வட்டியும் அதிகரிக்காது. எனவே வழக்கம் போல் செலுத்தப்படும் இ.எம்.ஐ. தொகையை 

வீட்டுக் கடன் வாங்கியவர்கள் செலுத்திக் கொண்டே இருக்கலாம் என்பது இந்த வட்டி விகிதத்தில் உள்ள நன்மை. 

அதே சமயம் இந்த வட்டி விகிதத்தில் சிறு குறையும் உள்ளது. மாறுபடும் வட்டி விகிதத்தை விட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதில் உள்ள சிறிய குறைபாடு இது. 

ஆனால், அண்மைக் காலமாகப் பெரும்பாலான வங்கிகள் வீட்டுக் கடன் வாங்கும் போது நிலையான வட்டி விகிதத்தில் கடனை வழங்குவ தில்லை. 

மாறுபடும் வட்டி விகிதத்தில் மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. என்றாலும் நிலையான வட்டி விகிதம் புழக்கத்தில் உள்ளது. 

ஏற்கெனவே நிலையான வட்டி விகிதத்தில்  வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதே வட்டி விகிதத்தில் தான் இ.எம்.ஐ.-யைச் செலுத்தி வருகிறார்கள்.  

மாறுபடும் வட்டி 
 
ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையைப் பொறுத்து இந்த வட்டி விகிதம் மாறும். 

அதாவது வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்தாலோ, குறைந்தாலோ அதைப் பொறுத்து மாறுபடும் வட்டியும் மாறும். 

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை மாதத் தவணை (இ.எம்.ஐ.) ஒரே அளவில் இருக்காது. 

வட்டி விகிதம் அதிகரிப்பது அல்லது குறைவதைப் பொறுத்து இ.எம்.ஐ. கொஞ்சம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். 

வட்டி விகிதம் குறையும் போது இ.எம்.ஐ. கொஞ்சம் குறையும் என்பதால் மாதச் சம்பளம் வாங்கி இ.எம்.ஐ.யைச் செலுத்துபவர்களுக்குக் கொஞ்சம் சுமை குறையும். 

அதே சமயத்தில் வட்டி விகிதம் ஏறும்போது இ.எம்.ஐ.யும் அதிகரிக்கும். 
எனவே வட்டி விகித ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். 

வட்டி விகிதம் குறையும்போது அதனால் கிடைக்கக்கூடிய பலனும் வீட்டுக் கடன் வாங்கிய வர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும். 

நிலையான வட்டியுடன் ஒப்பிடும் போது மாறுபடும் வட்டி விகிதம் அரை சதவீதம் குறைவு என்பது கடன் வாங்கிய வர்களுக்கு லாபம் தரக்கூடியது. 

ஆனால், இந்தியாவில் பணவீக்கம் மற்றும் விலைவாசியை வைத்து தான் வட்டி விகிதங்கள் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யப் படுகின்றன. 

இங்கே பண வீக்கமும், விலை வாசியும் பெரும்பாலும் ஏறுமுகத்திலேயே இருக்கின்றன. 
எனவே வட்டி விகிதம் உயரும்போது அவ்வப்போது மாதத் தவணையும் உயர்ந்து விடும். 

இதனால் வீட்டுக்கான பட்ஜெட்டில் அடிக்கடி துண்டு விழவும் வாய்ப்பு உள்ளது. இந்த வட்டி விகிதத்தில் இது ஒரு குறைபாடு. 

எது சிறந்தது? 
 
சரி, அப்படியானால் வீட்டுக் கடன் வாங்கும் எந்த வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது நல்லது? 

“பெரும்பாலானோர் மாறுபடும் வட்டியையே தேர்வு செய்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 

ஒன்று, நிலையான வட்டி அரை சதவீதம் அதிகமாக இருப்பது, இரண்டாவது, வட்டி குறைந்தால் அதன் நன்மை உடனுக்குடன் கிடைப்பது. 

இருந்தாலும் பணவீக்கத்தை வைத்தே வட்டி விகிதம் முடிவு செய்யப்படுவ தால் எதிர் காலத்தில் பணவீக்கம் எப்படி இருக்கும், ஏறுமா, குறையுமா போன்ற 
சந்தேகங்களை வங்கி யாளர்களிடமோ, பொருளாதார நிபுணர்களிடமோ அல்லது 

இது தொடர்பான விஷயம் தெரிந்தவர்களிடம் கலந்து பேசி வட்டி விகிதத்தை முடிவு செய்வதே நல்லது. 

பெரும்பாலான வங்கிகள் மாறுபடும் வட்டி விகிதத்தில் தான் இப்போது வீட்டுக் கடன் அளிக்கின்றன. 

எனவே நிலையான வட்டி விகிதம் நடைமுறையில் இல்லை என்றும் சொல்வதிற் கில்லை. 

அது வங்கியைப் பொறுத்தது என்பதால் நிலையான வட்டி விகிதத்தையும் கவனத்தில் கொள்ளலாம்” 

என்கிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ். கோபாலகிருஷணன். 

வீட்டுக் கடன் வாங்க முடிவு செய்து விட்டீர்களா? அப்படியானால் வட்டி விகித தேர்வு பற்றி ஒரு முறைக்கு இரண்டு முறை பேசி முடிவுசெய்யுங்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me