இயற்கையுடன் இணைக்கும் பால்கனி வீடு ! இயற்கையுடன் இணைக்கும் பால்கனி வீடு ! - ETbuild

இயற்கையுடன் இணைக்கும் பால்கனி வீடு !

என்னை எழுதத் தூண்டியதே சென்ற வார இதழில் வெளி வந்த வாசக சகோதரியின் கட்டுரை தான்.
நான் எழுத நினைத்ததை அவர் எழுதியிருந்தார். எனக்கு அதேபோல அனுபவம் இருந்தது.

அவரது கட்டுரையைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பல வருடங்களாக ஈரோட்டில் சொந்த வீட்டில் இருந்த நாங்கள் என் கணவரின் வேலை நிமித்தம் காரணமாக சென்னை வர வேண்டிய சூழல்.

சென்னை என்றாலேயே பரபரப்பான வாழ்க்கை என்பதால் முதலில் எங்களுக்கு வர ஒரு சிறு தயக்கம்.

ஆனால் இப்போது நாங்கள் இருப்பது நகரத்தின் மாசில்லாத வெளிப்புறத்தில்;

ஓர் அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில்; செங்கல்பட்டுக்கு மிக அருகில். 

ஈரோட்டில் தனி வீட்டில் இருந்து பழகிய எங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை புதிதாக இருந்தது.

ஒரே வீட்டை மேலே கிழே எனப் பகிர்ந்து கொள்வது விசித்திர மாகவும் தோன்றியது. 

ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்பு என்றதும் குருவிக் கூடுபோல இருக்கும் என நினைத்திருந்தோம்.

நாங்கள் எதிர் பார்த்தது போலல்லாமல் மூன்று படுக்கையறை மற்றும் பால்கனியுடன் தாரளமான இட வசதியுடன் இருந்தது வீடு.

சொல்லப் போனால் எங்களது ஈரோடு தனி வீட்டில் இருப்பது போன்ற உணர்வை இந்த வீடு எங்களுக்கு அளித்தது. 
 
வெளியில் இருந்து பார்த்தால் அடுக்குமாடிக் குடியிருப்பு போலத் தோற்றம் தரும் இந்த வீடு

உள்ளுக்குள் நுழைந்ததும் தனி வீடாக மனத்தில் தோற்றம் பெற்றுவிடும். நாங்கள் இருப்பதோ ஏழாவது மாடியில்.

அதனால் மாசில்லாத் தூய காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் குறை வில்லை.

பால்கனியில் நின்று பார்த்தால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஏரியும் மலைகளும் தெரியும்.

நாங்கள் குடி வந்த வருடம் ஏரி முழுவதும் நிறைந்து அலை அடித்துப் பிரம்மாண்ட மான கடல் போல் காட்சியளித்தது.

அதன் பின் போதுமான மழை இல்லாததால் இப்போது ஒரு சிறு ஓடை போலுள்ளது அந்த ஏரி.

அதிலும் சிறுவர்கள் மீன் பிடிப்பதும் பெண்கள் துணி துவைப்பதும் உண்டு.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் ஏரி நிரம்புகிறதா என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்போம்.

இங்கே வந்தாலே ஏதோ ஒரு சுற்றுலாத் தலத்தில் ரிசார்ட்டில் இருப்பது போன்றிருக்கும்.

வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அறிமுகப் படுத்துவது இந்த பால்கனியையும் ஏரியையும் தான்.

சூரிய உதயம் பார்க்கக் கன்னியாகுமரி என வேறு எங்கும் செல்ல வேண்டாம்.
 
இங்கிருந்தே தினமும் அதைக் கண்டு களிக்கலாம். மலைகளி னிடையே சூரியன் உதித்து எழுந்து வரும் காட்சி கொள்ளை அழகு.

கூடுதலாக ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டியும் இலவசமாகக் கிடைக்கும்.

இவை தவிர பறவைகளைக் கண்டு களிக்க ஏன் வேடந்தாங்கல் செல்ல வேண்டும்?

இங்கேயே பச்சைக்கிளி, மைனா, குயில், சிட்டுக் குருவி, புறா என்று விதவிதமான பறவைகளும்,

அவற்றின் கீச்கீச் சத்தங்களும் கேட்டுக் கொண்டே யிருக்கும். காலையில் எங்களை எழுப்புவதே குயிலின் கூவலும் கிளியின் கீச்சொலியும் தான். 

தினமும் பால்கனிக்கு வரும் கிளிகளுக்கு, அவற்றுக்குப் பிடித்தமான கம்பும் தினையும் வைப்பதுண்டு. கிளிகளுக்குப் போட்டியாக அணிலும் வருவதுண்டு. 

சிறிது தாமதமானாலும் கூட சமையலறை ஜன்னலருகே வந்து சத்தமிட்டு என்னைக் கூப்பிடும்.

எனது இஷ்ட தெய்வமான மதுரை மீனாட்சியின் பெயரை வைத்து அதை அழைப்பதுண்டு.

அவற்றை விதவிதமாகக் கைபேசியில் படம் பிடிப்பது எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு.

நாங்கள் இருக்கும் பகுதியில் விதவிதமான மரம், செடி, கொடி, புற்களுக்கும் குறைவில்லை.
 

சமையலறை பால்கனியில் நின்று பார்த்தால் எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தது போல் மரங்கள் பசுமையாக இருக்கும்.

அதுவும் குறிப்பாக ஜனவரி மாதத்தில் மரங்களி லெல்லாம் புற்கள் மலர்ந்து மஞ்சள் போர்வை போர்த்தியது போல் பார்க்கவே மிக ரம்யமாக இருக்கும்.

அந்தி சாயும் வேளையில் கையில் ஒரு கோப்பை தேநீர் மற்றும் வார, மாத, நாளிதழ் களோடு எனக்குப் பிடித்த பால்கனியில் அமர்ந்தால் பொழுது போவதே தெரியாது. 

மொத்தத்தில் இந்த பால்கனிக் காட்சிகள், நகரத்தின் பரபரப்பான சூழலிருந்து விலக்கி எங்களை இயற்கையோடு இணைக்கிறது. 
Previous Post Next Post
COMMENTS... plz use me