முன்பெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வீட்டு மனை வாங்குவார்கள்.
அதைப் பல வருடங்களாகக் கலந்து ஆலோசித்து சேமிப்புடன் கடனையும் வாங்கி ஒரு வழியாகத் தங்களுக்கென்று வீடு கட்டுவார்கள்.
தேவை இல்லாமல் மனை வாங்குவது கிடையாது. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.
வீட்டு மனை வாங்குவது ஒரு முதலீடாக ஆகி விட்டது.
பத்து வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டு மனையின் மதிப்பு இன்று விண்ணை முட்டி நிற்கிறது என்பதுதான் இதற்குக் காரணம்.
அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்றைக்குப் பல மடங்ககு உயர்ந்து ஏழு, எட்டு லட்சம் ரூபாய்க்கு விலை போகிறது.
அதனால் மக்கள் அனைவரும் வீட்டு மனைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை வைத்துதான் ரியல் எஸ்டேட் வியாபாரம் ஊரெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. முதலீடு ஆரோக்கியமானது தான்.
ஆனால், தேவைக்கு அதிகமாக இம்மாதிரி நாம் உருவாக்கும் மாயத் தேவையால் தான் மனைகளின் விலை இந்த அளவு ஏறிப் போயிருக்கிறது.
நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டு மனைகள் வாங்கும் பொருட்டு இப்போது மாதந்திரச் சேமிப்புத் திட்டங்களும் இப்போது நடை முறையில் உள்ளன.
தேனீக்களைப் போல மக்கள் சிறுகச் சிறுக சேமித்துத் தங்கள் எதிர் காலத்திற்கான முதலீடாக மனைகளை வாங்கிப் போடுகிறார்கள்.
அவ்வாறு மாதந்திரச் சேமிப்புத் திட்டங்களில் பெறப்படும் நிலங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே தான் இருக்கும்.
தமிழ் நாட்டின் மிகச் சிறிய நகரங்களில் இருந்து மாநகரங்கள் வரை இந்தச் சேமிப்புத் திட்டம் மக்களிடையே வெகு பிரபலம்.
இம்மாதிரி மனைகளை வாங்குவது ஒரு விதத்தில் சரியானது தான். ஓய்வு காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு இவை ஏற்புடை யவையாக இருக்கும்.
நம் வாரிசுகளு க்குப் பயன் தரும். ஆனால் இம்மாதிரி மனைகளை வாங்குவதில் நாம் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டு மனை வாங்கி விட்டோம் என சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்து விடுவோம்.
ஆனால் அதன் பிறகு தான் வேலை இருக்கிறது. பத்திரமும் முடிந்து விட்டதே இனி என்ன வேலை இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? இருக்கிறது.
நீங்கள் வாங்கிய உங்கள் மனையைப் பராமரிக்க வேண்டும். அதன் முன்பு வாங்கிய மனைக்கு பட்டா கோரிப் பெற வேண்டும்.
இப்போது பத்திரப் பதிவு மட்டும் போதாது. பட்டாவும் நிலத்திற்கு மிக அவசியம் எனத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பட்டா இல்லாத பட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனையைப் பதிவுசெய்த ஆவணங் களைக் காட்டி பட்டா கோரி விண்ணப்பித்துப் பெற வேண்டும்.
அந்த மனைக்கு ஏற்கனவே பட்டா வாங்கப் பட்டிருந்தால், அதை விற்றவரின் பெயரிலிருந்து நம் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லை யெனில் பிற்காலத்தில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இறந்து போன தந்தை அல்லது தாய் பெயரில் மனை இருந்தால், பெயர் மாற்றம் செய்து நம் பெயருக்கு மாற்றி க்கொள்ள வேண்டும்.
இதற்குத் தந்தை அல்லது தாயின் இறப்பு சான்றிதழும் வாரிசு சான்றிதழும் தேவைப்படும்.
நாம் வாங்கிய மனை ஊருக்கு வெளியில் இருக்கும் பட்சத்தில் அந்த மனையைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனையைச் சுற்றி கல் நட்டு, சுற்று வேலிகள் அமைத்துக் கொள்வது நல்லது.
அது போல ஒய்வு நேரம் கிடைக்கும் போது அடிக்கடி மனையைச் சென்று பார்க்க வேண்டும்.
சிலர் வாங்கிப் போட்டு விட்டு ஆண்டுக் கணக்காக அந்தப் பக்கமே போகாமல் இருந்து விடுவார்கள்.
கல்லும் நட்டவில்லை என்றால் உங்கள் மனையைப் பிரித்தறிவதே சிரமம்.
அதனால் குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறையாவது மனையைச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
வேலி அமைத்து மனையின் உரிமை யாளாரான உங்கள் பெயரையும் எழுதி வைத்து விடுங்கள்.
Tags:
build